நெல்லை: பாளையங்கோட்டை தாலுகா சிவந்திபட்டி அருகே உள்ள முத்தூர் கிராமத்தை சேர்ந்த பூலையா- லட்சுமி தம்பதியரின் மகன் கணேசன். சுமார் 70 வயதான பூலையா தனது தந்தை கொம்பையாவின் தோட்டத்தை ரூ.1.40 கோடிக்கு விற்றுள்ளார். அதில் கணேசனுக்கு ரூ.50 லட்சத்தை கொடுத்து விட்டு, மீதமுள்ள தொகையை தனது சகோதரிகளுக்கு பூலையா பிரித்து கொடுத்துள்ளார். ஆனால், வீட்டை இடித்து கட்டுவதற்காக கூடுதலாக ரூ.10 லட்சம் கேட்டு தந்தையிடம் கணேசன் தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில், முத்தூர் பேருந்து நிறுத்தத்தில் பூலையா காத்திருந்தபோது, அங்கு வந்த கணேசன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில் பூலையா அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பின்னர் கணேசன் சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீஸார் வழக்கு பதிந்து கணேசனை கைது செய்தனர்.