சென்னை: பெட்ரோல் குண்டு வீசி காதலியின் அண்ணன், அவரது நண்பர்களை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பெட்ரோல் குண்டு வெடிக்காததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.
சென்னை உள்ளகரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (25). இவரது தங்கை சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். அதே பகுதியில் ஆன்லைன் மூலம் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும் நெல்சனும் (25) ரஞ்சித்தின் தங்கையும் காதலித்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த ரஞ்சித் தங்கையிடம் அறிவுரை கூறியும் அவர் காதலை கைவிடாததால், ஆத்திரமடைந்தார். பின்னர், தங்கையை விழுப்புரத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். இதையறிந்த நெல்சன் தனது நண்பர்களுடன் சென்று ரஞ்சித்திடம் தகராறில் ஈடுபட்டதோடு அவரது பைக்கையும் பறித்துள்ளார்.
இதற்கு பதிலடியாக ரஞ்சித் தனது நண்பர்களுடன் சென்று நெல்சனின் நண்பரின் பைக்கை எடுத்து உள்ளகரம் பாரதி தெருவில் மறைத்து வைத்தார். மேலும், `என் பைக்கை கொடுத்தால்தான், உனது நண்பரின் பைக்கை கொடுப்பேன்' என நெல்சனிடம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த நெல்சன் தனது நண்பர்களான மெக்கானிக் ஜெயக்குமார், ஜவுளிக்கடை ஊழியர் கோகுல் ஆகியோருடன் உள்ளகரத்துக்கு சென்று ரஞ்சித், அவரது நண்பர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியுள்ளார். நல்வாய்ப்பாக பெட்ரோல் குண்டு வெடிக்காததால் ரஞ்சித்தும், அவரது நண்பர்களும் உயிர் தப்பினர்.
இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து நெல்சன், அவரது நண்பர்கள் ஜெயக்குமார், கோகுல் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.