கிருஷ்ணகிரி: தளி அருகே தம்பியைக் கொலை செய்து விட்டு தலைமறைவான அண்ணனை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிக்க அழகப்பா மகன் நக்கலய்யா (36). இவர் ஒசூர் அருகே தாசனபுரத்தில் தனது மனைவி நாகரத்திராவும் (28) தங்கி தனியார் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது இரு ஆண் குழந்தைகள் லட்சுமிபுரத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வளர்ந்து வருகின்றனர். இதற்கு நக்கலய்யாவின் அண்ணன் சின்னைய்யா (38) எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும், குழந்தைகளைக் கண்டித்தும், அடித்தும் வந்துள்ளார்.
இந்நிலையில், உகாதி பண்டிகைக்காக லட்சுமிபுரத்துக்கு வந்த நக்கலய்யா, தனது அண்ணனிடம் குழந்தைகளை கண்டிப்பது குறித்து கேட்டுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் துாங்கி கொண்டிருந்த நக்கலய்யாவை, சின்னைய்யா அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பினார்.
தகவல் அறிந்து அங்கு வந்த தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் கணேஷ்குமார், கொலையான நக்கலய்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்துத் தலைமறைவான சின்னைய்யாவைத் தேடி வருகின்றனர்.