கோவையில் ரவுடிகளை கட்டுப்படுத்த கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரம்: மாவட்ட எஸ்.பி தகவல் 


கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்வில், மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன். | படம்: ஜெ.மனோகரன் 

கோவை: மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்த கைது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களில் திருடு போன, மாயமான செல்போன்கள் குறித்து அதன் உரிமையாளர்கள் அளித்த புகார்களின் பேரில், மாவட்ட காவல்துறையினர் விசாரித்தனர். அதனடிப்படையில், ரூ.54 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள, 304 செல்போன்கள் மாவட்ட காவல்துறையினரால் கண்டுபிடித்து மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட இந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (ஏப்.1) நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமை வகித்து செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பொதுமக்களிடம் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் விதமாக கைது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக குற்ற பின்னணியில் உள்ள 74 நபர்கள், கண்காணிக்கப்பட்டு பிடிபட்டனர். அதில், 44 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட பகுதியில் குற்றவாளிகள் எளிதில் நடமாடுவதை கட்டுப்படுத்தியுள்ளோம்.

வெளி மாவட்டம், வெளி மாநிலங்ளில் தங்கியிருந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வருகிறோம். நீலகிரி செல்பவர்கள் இ-பாஸ் முறையை பதிவு செய்ய சோதனைச்சாவடி அமைத்து, நீலகிரி மாவட்ட காவல்துறையினருடன் சேர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக, கல்லூரிகளில் இடை நிற்றல் மாணவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.

x