ஆந்திராவிலிருந்து கடத்தல்; கைப்பேசி வாயிலாக சாராயம் விற்ற இருவர் வேலூரில் கைது


வேலூர்: ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வந்து கைப்பேசி வாயிலாக விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் சாராய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலங்களில் இருந்து மதுபான பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வது தொடர்கிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து தமிழக எல்லை பகுதியான பரதராமி பகுதியில் கைப்பேசி வாயிலாக குறிப்பிட்ட நபர்களுக்கு விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், பரதராமி போலீஸார் தமிழக-ஆந்திர எல்லையான தசராபள்ளி பகுதியில் கண்காணிப்பு பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிரு ந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் (46), சுதாகர் (26 ) என தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், பாக்கெட் சாராயம் இருந்தது.

அவற்றை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து பரதராமி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு கைப்பேசி வாயிலாக தொடர்புகொண்டு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, விஜயகுமார் மற்றும் சுதாகர் ஆகிய இருவரை கைது செய்த பரதராமி போலீஸார் அவர்களிடமிருந்து 3 லிட்டர் சாராயம் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

x