திருப்பத்தூர்: ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன தேங்காய் உரிக்கும் தொழிலாளி ஆம்பூர் அருகே காப்புக்காட்டில் எலும்புக் கூடாக நேற்று மீட்கப்பட்டார். கொலையா ? தற்கொலையா ? எனக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் சின்னமலையாம்பட்டு காப்புக்காடு பகுதியில் தூக்கில் தொங்கியபடி எலும்புக் கூடாக ஆண் சடலமும் அதன் அருகில் மண்டை ஓடும் இருப்பதை அந்த வழியாக ஆடு மேய்ப்பவர்கள் நேற்று கண்டனர். உடனே, அவர்கள் உமராபாத் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காப்புக்காட்டில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி எலும்புக் கூடு மற்றும் மண்டை ஓட்டையும் கைப்பற்றினர்.
பிறகு, இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், மீட்கப்பட்ட எலும்புக் கூடு ஆம்பூர் அடுத்த காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளி முரளி (38) என்பதும், இவருக்குத் திருமணம் ஆகி 3 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், நடத்தப்பட்ட விசாரணையில், முரளி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காணாமல்போன முரளி காப்புக் காட்டுக்கு எதற்காகச் சென்றார். அவர் அங்குத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது யாராவது அவரை கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டுச் சென்றார்களா ? என்பது குறித்து உமராபாத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.