தூத்துக்குடி: கயத்தாறு அருகே காரை வைத்து மோதியும், அரிவாளால் தாக்கியும் பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை செய்யப்பட்டார்.
கோவில்பட்டி அருகே உள்ள காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த செல்லையா மகன் சங்கிலி பாண்டி(30). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சங்கிலிபாண்டி கடம்பூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் மேலாளராக பணியாற்றி வந்தார். இதற்காக குடும்பத் துடன் கயத்தாறில் வசித்து வந்தார்.
நேற்று காலை 9 மணியளவில் கயத்தாறில் இருந்து புறப்பட்டு கடம்பூரில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். இந் நிலையில், கயத்தாறு- கடம்பூர் நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி விலக்கு அருகே கார் மோதி சங்கிலி பாண்டி இறந்து கிடப்பதாக கயத்தாறு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் விரைந்து சென்று சாலையோரம் முட்புதருக்குள் கிடந்த சங்கிலி பாண்டி சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விபத்து ஏற்படுத்திய கார் அங்கு இருந்தது. மேலும், சம்பவ இடத்தில் செடி கொடிகளில் ரத்தச் சிதறல் இருந்ததால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், சங்கிலி பாண்டியின் உடலில் வெட்டுக்காயங்களும் இருந்தன. இதையடுத்து இது கொலை என்பது தெரியவந்தது. போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மோப்ப நாய் ஜியா மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், கயத்தாறில் இருந்து கடம்பூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற சங்கிலி பாண்டியை காரில் பின்தொடர்ந்த கும்பல், சத்திரப்பட்டி விலக்கு பகுதியில் ஆள் நடமாட்டமில்லாததை பார்த்து, மோட்டார் சைக்கிள் மீது காரால் மோதியுள்ளனர். இதில், கீழே விழுந்த சங்கிலி பாண்டியை, காரில் இருந்து இறங்கி வந்த கும்பல் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் சங்கிலி பாண்டி உயிரிழந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. தனிப்படை போலீஸார் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.