சங்கரன்கோவில் சிக்கன் கடையில் தகராறு: திமுக கவுன்சிலர் மீது தாக்குதல்


தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சி 5-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ராஜா ஆறுமுகம். அதிமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், பின்னர் திமுகவில் இணைந்தார். இவர், தற்காலிக புதிய பேருந்து நிலையம் அருகே சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி வருகிறார். அதன் அருகிலேயே அவரது தம்பி சங்கர் என்பவர் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.

சங்கரின் சிக்கன் கடைக்கு மதுபோதையில் வந்த 4 பேர், சிக்கன் உணவு வகைகளை வாங்கிக்கொண்டு பணம் தராமல் செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கடை உரிமையாளர் சங்கருக்கும், மதுபோதையில் இருந்த 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சங்கரின் அண்ணன் ராஜா ஆறுமுகம் என்பவர் விரைந்து சென்று, அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது, அந்த 4 பேரும் கடையில் இருந்த பொருட்களை சூறையாடியதோடு, ராஜா ஆறுமுகத்தை மது பாட்டிலை கொண்டு தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தலையில் காயம் அடைந்த ராஜா ஆறுமுகம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சங்கரன்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

x