மதுரை: மதுரையில் பிரபல ரவுடி வெள்ளக்காளியின் நெருங்கிய கூட்டாளி மதுரையில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.கே.குருசாமி, ராஜபாண்டியன். உறவினர்களான இவர்களுக்கு இடையே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்பகை ஏற்பட்டது. இதன் காரணமாக இரு தரப்பிலும் பழிக்குப் பழியாக பல கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 22 ஆண்டுகளில் இரு தரப்பிலும் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் கடந்த 22-ம் தேதி வி.கே.குருசாமியின் சகோதரி மகன் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் (35) என்பவரை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த சுள்ளான் பாண்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பிரபல ரவுடி வெள்ளக்காளியின தாயார் உட்பட 7 பேரை தனிப்படையினர் தேடி வந்தனர்.
கடந்த 29-ம் தேதி மதுரை கல்மேடு எம்ஜிஆர் நகர் நந்தகுமார் (20), சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள மணல்மேடு முத்துகிருஷ்ணன் (18), மதுரை ஸ்டேட் பேங்க் காலனி அசேன் (32), சென்னை கொளத்தூர் ஜவகர் நகர் கார்த்திக் (28), மதுரை காமராஜர்புரம் கக்கன் தெரு நவீன் (22), மணல்மேடு பாலகிருஷ்ணன் (26), காமராஜர்புரம் ஜெயக்கொடி (65) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய பங்கஜம் காலனியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (26) என்பவரை தொடர்ந்து தேடி வந்தனர். இவர் பிரபல ரவுடி வெள்ளக்காளியின் நெருங்கிய கூட்டாளியாவார்.
இந்நிலையில், மதுரை சிந்தாமணி பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த சுபாஷ் சந்திரபோஸை நேற்று மாலை காவல் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான தனிப்படையினர் பிடிக்க முயன்றனர். அப்போது, தனிப்படையினரை சுபாஷ் சந்திரபோஸ் அரிவாளால் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பினார். அவரை ஜீப்பில் காவல் ஆய்வாளர் பூமிநாதன் விரட்டிச் சென்றார். சிந்தாமணி பகுதியில் சுபாஷ் சந்திரபோஸை பிடிக்க முயன்றபோது, அவர் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து, தற்காப்புக்காக பூமிநாதன் துப்பாக்கியால் சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார். சுபாஷ் சந்திரபோஸ் அரிவாளால் தாக்கியதில் காயமடைந்த 2 போலீஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுபாஷ் சந்திரபோஸ் உடலின் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.