ராமநத்தம் அருகே கள்ளநோட்டு அச்சடிப்பு: தப்பியோடிய விசிக பிரமுகர்!


ராமநத்தம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கள்ள நோட்டு

vகடலூர்: ராமநத்தம் அருகே வயக்காட்டில் உள்ள கொட்டகையில் கள்ள நோட்டி அச்சடித்த கும்பலை போலீஸார் சுற்றிவளைத்த போது, அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் மகன் செல்வம் (39). இவர் விசிக கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ளார். இவர் தனக்கு சொந்தமான விளைநிலப் பகுதியில் கொட்டகை அமைத்து அதில் லேப்டாப் பிரிண்டர் வைத்து கள்ளநோட்டு அச்சடிப்பதாக ராமநத்தம் போலீஸாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து இன்று (மார்ச் 31) காலை ராமநத்தம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார், விளைநிலப் பகுதிக்கு சென்றனர்.போலீஸார் வருவதை கண்டதும், கொட்டகையில் இருந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதையடுத்து போலீஸார் கொட்டகையில் சோதனையில் ஈடுபட்ட போது, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 83 ஆயிரம் மற்றும் கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம், லேப்டாப், பிரிண்டர் மிஷின்,ஏர் கண், ஏர் பிஸ்டல் , வாக்கிடாக்கி மற்றும் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படும் பேப்பர் பண்டல்கள் ஆகியவற்றை போலீஸார் கண்டெடுத்தனர். பின்னர் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போலீஸார், தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

இதனிடையே, செல்வம் என்பவரின் செயலை அறிந்த விசிக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிடமணி, கட்சி பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

x