பாளையங்கோட்டை உணவக ஊழியர் மீது தாக்குதல்; சிறுவன் உட்பட 2 பேர் கைது


பாளையங்கோட்டை: சமாதானபுரத்தைச் சேர்ந்த அந்தோணி ஞானமுத்து செல்லத்துரை என்பவரின் மகன் ஆல்வின் (23). இவர், வீரமாணிக்க புரத்தைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 16 வயது நண்பருடன் காரில் வண்ணார்பேட்டையில் உள்ள உணவகத்துக்கு சாப்பிட சென்றுள்ளார்.

அப்போது உணவக ஊழியரான மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த நாராயணன் (30) என்பவரிடம் ஆர்டர் கொடுத்து விட்டு, இருவரும் சாப்பிட அமர்ந்திருந்தனர். உணவு வருவதற்கு காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆல்வின் தனது நண்பருடன் சேர்ந்து உணவக ஊழியர் நாராயணனிடம் வாக்குவாதம் செய்து, தாக்கியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த சக ஊழியர்கள் அவர்களை சமாதானப் படுத்தினர்.

தொடர்ந்து அவர்கள் தகராறு செய்யததால் பாளையங்கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸார் விரைந்து சென்று, இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின் பேரில் இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆல்வினை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

x