எட்டயபுரம் அருகே தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு - இரு இளைஞர்கள் மீது கொலை வழக்கு


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 17 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கைதான இரண்டு இளைஞர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு சென்று வாழ்ந்து வருகிறார். இவரது 17 வயது மகளை அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (21) என்ற இளைஞர் விரும்பியுள்ளார். இதுதொடர்பான பிரச்சினை குறித்து பரமக்குடி காவல் நிலையத்தில் கடந்த 2024-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டு, போலீஸார் விசாரணை நடத்தி இரு தரப்பிடமும் எழுதி வாங்கி புகாரை முடித்து வைத்துள்ளனர்.

ஆனால், தொடர்ந்து சந்தோஷினால் பிரச்சினை ஏற்பட்டதால், அச்சிறுமி எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், கீழநம்பிபுரம் வீட்டில் கடந்த 23-ம் தேதி மதியம் திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, தீக்காயங்களுடன் அச்சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை பெற்று வந்த சிறுமி, போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ‘சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகியோர் வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்’ எனத் தெரிவித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொலை முயற்சி வழக்கில் பரமக்குடியைச் சேர்ந்த சந்தோஷ் (21), அவரது நண்பர் முத்தையா(22) ஆகியோரை எட்டயபுரம் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x