ரூ.2 லட்சம் பணம் மோசடி: சேலம் திமுக மகளிரணி நிர்வாகி கைது


சேலத்தில் மாற்றுத்திறினாளி இளைஞருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.2 லட்சம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட திமுக பெண் நிர்வாகியை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

அரியலூர் மாவட்டம் செந்தூர் அருகே உள்ள கீழராயபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் அரவிந்தசாமி (30). அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக செவ்வாய்ப்பேட்டை பகுதி திமுக மகளிரணி அமைப்பாளர் வித்யா என்பவர் மீது, செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நண்பர் மூலமாக செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த வித்யா (39) அறிமுகமானார். இவர் திமுக அரசியல் பிரமுகர்கள் எனக்கு நன்கு அறிமுகம் உள்ளதால், ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடம் பெற்று தருவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய அரவிந்தசாமி, வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.2 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், வித்யா கூறியபடி அரசுப் பணி வாங்கிக் கொடுக்காமலும், பணத்தை திரும்பக் கொடுக்காமலும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும், போலி பணி ஆணையை வழங்கி மோசடி செய்துள்ளார். இவர் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் செவ்வாய்ப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். திமுக பெண் நிர்வாகி வித்யா, மாற்றுத்திறனாளியிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் பெற்று, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, வித்யாவை போலீஸார் கைது செய்து, பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.

x