கோவை சிறையில் கைதி கொலை: துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறல்


திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (33). இவர் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 2016-ம் ஆண்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி சிறையில் உள்ள கழிவறைக்கு அவர் சென்றார். அப்போது அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவருடைய கழுத்து எலும்பு முறிந்த நிலையில் இருந்தது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில் கைதி ஏசுதாஸ் அடித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

கொலையாளிகளை கண்டறிய 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தினர். மாஜிஸ் திரேட்டும் சிறைக்குள் சென்று விசாரணை நடத்தினார். இக்கொலை நடந்து 2 மாதம் ஆகியும் கொலையாளிகள் யார் என்று துப்பு துலக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, ”கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 20 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதில் யார் கொலையாளிகள் என்று அடையாளம் காண முடியவில்லை. அத்துடன் சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்பட வில்லை. கைதி ஏசுதாஸ் அடைக்கப்பட்ட அறைக்கும், அவர் உயிரிழந்து கிடந்த கழிவறைக்கும் 100 அடி தூரம்தான் இருக்கும்.

எனவே அந்த நேரத்தில் அங்கு சென்ற நபர்கள் யார், உயிரிழந்த ஏசுதாசுக்கும், சிறையில் உள்ள கைதிகளில் யாருக்கெல்லாம் முன்விரோதம் இருந்தது, ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் யார் ? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். சந்தேக நபர்களான 20 பேரை தலா 5 நபராக பிரித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம்” என்றனர்.

x