நிலம் வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அண்ணாநகர் மேற்கு பாடிகுப்பம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் அஜ்மல் கான் (41). தனியார் தொலைக் காட்சி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் நிலம் வாங்குவதற்காக தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜா ஜாக்கிரியாஸ், ஆனந்த் குமார் ஆகியோரை அணுகி உள்ளார்.
அவர்கள், காட்டாங்கொளத்தூரில் 1,800 சதுர அடி காலி இடம் இருப்பதாகவும், அதனை வாங்கி தருவதாக கூறியதன் பேரில், 2023ம் ஆண்டு, உரிமையாளர்கள் இருவருக்கும் ரூ.6 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால், வெகு நாட்களா கியும், இருவரும் அஜ்மலுக்கு நிலம் வாங்கி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
மேலும், அஜ்மல்கான் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து அஜ்மல்கான் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார், மோசடியில் ஈடுபட்ட கூடுவாஞ்சேரியை சேர்ந்த ராஜா ஜாக்கிரியாஸ் (41), ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த் குமார்(30) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.