புதுச்சேரி தொழிலதிபரை ஆசை வலையில் வீழ்த்தி திருட்டு: பெண்ணின் வீட்டிலிருந்து பணம் பறிமுதல்


புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேட்டு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ்ராஜ். இவரை கடந்த 11-ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்ட அறிமுகமில்லாத பெண் ஒருவர், தன்னுடன் மது அருந்த அழைத்துள்ளார். அவரது பேச்சில் மயங்கிய பிரகாஷ்ராஜ் அந்தப் பெண்ணுடன் உருளையன்பேட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

அப்போது மது அருந்திய பிரகாஷ்ராஜ் மயங்கிய நிலையில், அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை அந்தப் பெண் திருடி சென்றார். இதுகுறித்து பிரகாஷ்ராஜ் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சிலம்பூர் பகுதியைச் சேர்ந்த கலையரசி என்பவரை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், அவரை மீண்டும் நீதிமன்ற அனுமதியுடன் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இதில், ஆண்டிமடம் சிலம்பூரில் உள்ள கலையரசி வீட்டில் இருந்து ரூ.50 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. தொழிலதிபரின் நகைகள் மற்றும் செல்போனை விற்று செலவு செய்துவிட்டதாகவும், அதில் ரூ.50 ஆயிரம் மட்டுமே மீதம் இருப்பதாக கலையரசி கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். அவரை போலீஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

x