திருச்சி: திருச்சி மாவட்டம் பெரமங்கலத்தைச் சேர்ந்த பெ.செல்வராஜ் (55), க.முத்து (64), து.செல்வராஜ் (55), திருவெள்ளறையைச் சேர்ந்த ராம் (என்ற) ராம்ராஜ் (45) ஆகியோர் 15 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பல நாட்களாக பாலியல் வன்கொடுமை அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அச்சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸார் கடந்த 2019-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அச்சிறுமி 6 மாத கர்ப்பத்துக்கு காரணம் பெ.செல்வராஜ் என்பது மரபணு சோதனையில் தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி என்.எஸ்.ஸ்ரீவத்சன், குற்றம்சாட்டப்பட்ட பெ.செல்வராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் ஆறு மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் பெற்றுத் தரவும் உத்தரவிட்டார். குற்றம்சட்டப்பட்ட மற்ற மூவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸாரை எஸ்.பி செல்வ நாகரத்தினம் பாராட்டினார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சுமதி ஆஜரானார்.