மதுரை: உசிலம்பட்டி காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், சிந்துப்பட்டி அருகிலுள்ள கள்ளபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (45). உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றினார். விடுமுறையில் இருந்த முத்துக்குமார், உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டி பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று முன் தினம் மாலை சென்றுள்ளார். அங்கு அவர், கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்தவர்களுக்கும அறிவுரை கூறிய போது காவலரை கொலை செய்தனர்.
முத்துக் குமாருடன் வந்த அவரது ஊரைச் சேர்ந்த ராஜாராம் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த உசிலம்பட்டி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று முத்துக்குமாரின் உடலை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையான முத்துக்குமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
இதையடுத்து, குற்றவாளிகளை கைது செய்யும் வரை காவலர் முத்துக்குமாரின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன்பின் இன்று காலை பேச்சுவார்த்தைக்கு பின் முத்துக்குமாரின் உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர். இதன்பின் 21 குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் தேடப்பட்ட கஞ்சா வியாபாரியான பொன்வண்ணன் கம்பம் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொன்வண்ணனை பிடிக்கச்சென்றபோது, அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதனையடுத்து போலீஸார் நடத்திய என்கவுன்டரில் அவர் கொல்லப்பட்டார்