'கணவர் மிரட்டுகிறார்’ - நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமார் மனைவி முத்துலட்சுமி (32). இவரது பூர்வீகம் நாகர்கோவில். இந்த தம்பதியருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், தனது 2 பிள்ளைகளுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த முத்துலட்சுமி, திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி, தண்ணீரை ஊற்றி மீட்டனர். முத்துலட்சுமி கூறும்போது, பி.இ. சிவில் முடித்துள்ள நான், கணவரோடு சேர்ந்து கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தேன். கடந்த 10 மாதங்களாக குடும்ப தகராறு காரணமாக பிரிந்து வாழ்கிறேன். விவகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளேன்.

இந்நிலையில், நான் பணமோசடி செய்துள்ளதாக வீரவநல்லூர் போலீஸில் கணவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீஸார் என்மீது 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். எனது கணவரும், அவரது சகோதரரும் என்னை மிரட்டுகிறார்கள். எனவே, வாழவழியின்றி தற்கொலை செய்ய முயன்றேன். பொய் வழக்குகளில் இருந்து என்னை காப்பாற்றி, நானும் எனது குழந்தைகளும் வாழ்வதற்கு வழிசெய்ய வேண்டும் என்றார்.

x