கோவை: கோவையில் உயர் ரக போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், பெண் உதவி ஆய்வாளரின் மகன், கூட்டாளிகள் என 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தர் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர்கள் விவேக், தனபால் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீஸார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நேற்று முன்தினம் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பூமார்க்கெட் அம்மா உணவகம் அருகே நின்ற 7 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(39), விநாயகம்(34), பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணகாந்த்(34), வடவள்ளியைச் சேர்ந்த மகாவிஷ்ணு(28), சுங்கம் பகுதியைச் சேர்ந்த ஆதர்ஷ்(24), நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த ரித்தீஷ் லம்பா(41), திருச்சி சாலை ரெயின்போ காலனியைச் சேர்ந்த ரோஹன் ஷெட்டி(30) ஆகியோர் என்பதும், கஞ்சா, உயர் ரக போதைப் பொருள் ஆகியவற்றை விற்பனை செய்பவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 7 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதில், மகாவிஷ்ணு என்பவர், கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயலட்சுமியின் மகன் ஆவார்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘மணிகண்டன், ரித்தீஷ் லம்பா ஆகியோர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜேக்கப் பிராங்ளின் மூலமாக எம்.டி.எம்.ஏ என்ற உயர் ரக போதைப் பொருள் மற்றும் கொகைன் வாங்கி இவர்களுடன் சேர்ந்து விற்பனை செய்துள்ளனர். ரோஹன் செட்டி என்பவர், இமாச்சல பிரதேசத்தில் இருந்து கஞ்சா, கிரீன் கஞ்சா, உயர் ரக போதைப் பொருட்களை தருவித்துள்ளார்.
போதைப் பொருள் விற்பனை மூலமாக பல லட்சம் பணத்தை சம்பாதித்துள்ளனர். இவர்களிடமிருந்து 24.400 கிராம் எம்.டி.எம்.ஏ உயர் ரக போதைப்பொருள், 12.47 கிராம் கொகைன், 1 கிலோ 620 கிராம் கிரீன் கஞ்சா, 1 கிலோ 16 கிராம் உலர் கஞ்சா, 1.680 கிராம் குஷ் உயர் ரக போதைப் பொருள், ரூ.25 லட்சம் ரொக்கம், எடை பார்க்கும் கருவி, 80 பீர் பாட்டில்கள், 3 கார்கள், 12 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன’’ என்றனர்.
மாநகர காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தர் கூறும்போது, ‘‘இவர்கள் மும்பையில் இருந்து கூரியர் மூலமாக உயர் ரக போதைப் பொருட்களை வரவழைத்து விற்பனை செய்துள்ளனர். இக்கும்பலின் தலைவராக மணிகண்டன் இருந்துள்ளார். போதைப்பொருள் விற்பனையின் மூலம் வாங்கிய சொத்துக்களை கணக்கில் எடுத்து அவற்றை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.