சிறுமிக்கு பாலியல் தொல்லை; முகத்தை சிதைத்து கொலை - திருப்பத்தூர் நாடக கலைஞருக்கு ஆயுள் சிறை


திருப்பத்தூர்: புதூர்நாடு அருகே மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்த நாடக கலைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு அடுத்த நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்காளி. இவரது மகன் பரமசிவம் (35). நாடக கலைஞர். இவர், கட்டிட வேலையும் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி, ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 13-04- 2012-ல் பரமசிவம் ஆம்பூர் பகுதியில் தெருக்கூத்து நாடகத்தில் நடிக்கச் சென்றார்.

அப்போது ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஜெயப்பிரதா (15) என்பவர், அதேபகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இதில், ஜெயப்பிரதாவுக்கும், பரமசிவத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் கைபேசி மூலமாக அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பரமசிவம் தான் வீடு கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால், ஜெயப்பிரதாவிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என திட்டம் திட்டி ஜெயப்பிரதாவிடம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறி அவரை வீட்டில் இருந்து கடந்த 5-6-2012-ல் திருப்பத்தூருக்கு வரவழைத்துள்ளார்.

பின்னர், இருவரும் ஏலகிரி மலைக்கு சென்று விடுதியில் அறை எடுத்து தங்கினர். இதையடுத்து ஜூன் 6-ம் தேதி பரமசிவம் தனது ஊருக்கு அழைத்துச்செல்வதாக ஜெயப்பிரதாவை புதூர்நாடு அடுத்த கம்புக்குடி வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது பரமசிவம், ஜெயப்பிரதாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு ஜெயப்பிரதா உடன்படாததால் ஆத்திரமடைந்த பரமசிவம், ஜெயப்பிரதாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அவரது முகத்தை சிதைத்து அவர் அணிந்திருந்த 5 கிராம் மதிப்பிலான தங்க நகை, அவரிடம் இருந்த ரூ.6 ஆயிரம், ஏடி.எம் கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, ஜெயப்பிரதா உடலை வனப்பகுதியில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இதற்கிடையே, ஜெயப்பிரதா காணவில்லை என அவரது தந்தை 6-6-2012-ல் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஜெயப்பிரதாவை, பரமசிவம் தான் அழைத்துச்சென்று கொலை செய்தை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், பரமசிவம் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மீனாகுமாரி நேற்று தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

x