மரக்காணம்,சரவணப்பாக்கம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் விடுதலை; மேல்முறையீடு செய்ய எம்.பி ரவிக்குமார் கோரிக்கை!


சென்னை: விழுப்புரம் சரவணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தலித் குடியிருப்புத் தாக்கப்பட்ட வழக்கில் 96 பேரும்; மரக்காணம் கலவர வழக்கில் 20 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனை தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவேண்டும் என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘விழுப்புரத்தில் உள்ள எஸ்சி, எஸ்டி சமூகத்தினர் மீதான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் தனியுறு சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். சரவணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தலித் குடியிருப்புத் தாக்கப்பட்ட வழக்கில் 96 பேரும்; 2013 இல் நடந்த மரக்காணம் கலவர வழக்கில் 20 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது ஒரு சிறப்புச் சட்டம். அதன்கீழ்ப் பதியப்படும் வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தப்படுகின்றன. குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. ஆனால் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை கொடுப்பதோ மிக மிகக் குறைவாக உள்ளது. வழக்கை நடத்தும் அரசுத் தரப்பே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

தனியுறு சிறப்பு நீதிமன்றங்களில் விடுதலை செய்யப்படும் கலவர வழக்குகளிலும், கொலை வழக்குகளிலும் உடனடியாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசுத் தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாளை நடைபெறவுள்ள மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு (SVMC) கூட்டத்துக்குத் தலைமை ஏற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதுகுறித்து ஆராய்ந்து உரிய அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

x