சென்னை: ஐபிஎல் போட்டியில் தோல்வியடைந்த சென்னை அணியை கிண்டல் செய்த நபரை சக நண்பர்கள் தாக்கியதில், படுகாயமடைந்த ஜீவரத்தினம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதி திருவள்ளுவர் நகரில் நண்பர்கள் சிலர் மது அருந்திவிட்டு, சிஎஸ்கே - ஆர்சிபி கிரிக்கெட் மேட்ச் பார்த்துள்ளனர். இதில் 17 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. அப்போது சென்னை அணிக்கு ஆதரவாக பேசிய நண்பர்களை வேளச்சேரியை சேர்ந்த ஜீவரத்தினம்(27) கிண்டல் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சென்னை அணியின் ஆதரவாளர்களான நண்பர்கள், கற்கள், கட்டைகளால் ஜீவரத்தினத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஜீவ ரத்தினம் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அந்த நபர்கள் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து உடைத்து சூறையாடி விட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக துரைப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்லுக்குட்டை அப்பு, ஜெகதீஷ், ரமேஷ் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி விவரம்: நடப்பு ஐபிஎல் சீசனின் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நேற்று விளையாடின. சென்னை - சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்து வீச முடிவு செய்தார்.
ஆர்சிபி அணிக்காக பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் சால்ட். தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் கோலி. இறுதியாக 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது ஆர்சிபி.
197 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரர்களாக ரச்சின் ரவீந்திரா 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்தார். எதிர்முனையில் ஆடிய ராகுல் 5 ரன்களில் நடையை கட்டினார்.
கேப்டன் ருதுராஜ் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். தீபக் ஹூடா, சாம் கர்ரன், ஷிவம் டூபே என அடுத்தடுத்து விக்கெட்கள் விழவே, ரவீந்திர ஜடேஜா மட்டுமே 25 ரன்கள் வரை சமாளித்தார். வழக்கமாக 7வதாக பேட்டிங் இறங்கும் தோனி இந்த முறை இறங்கவில்லை. அவருக்கு பதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 7வதாக இறங்கினார். ஆனால் லியாம் லிவிங்ஸ்டன் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 11 ரன்களில் வெளியேறினார்.
அடுத்ததாக இறங்கிய தோனி 16 ரன்களில் 30 ரன்கள் எடுத்தார். எனினும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விரட்டமுடியாமல் 20 ஓவர் முடிவில் 146 ரன்களுடன் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. இதன்மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி வீழ்த்தியுள்ளது. கடைசியாக 2008ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி ஆர்சிபி-யிடம் தோற்றிருந்தது.