பில்லி, சூனியத்தை அகற்றுவதாக கூறி பெண்களிடம் அத்துமீறிய மதபோதகர் மற்றும் அவரது கார் ஓட்டுநர் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள கருப்பூரில் வசித்து வருபவர் ஜோசுவா இம்மானுவேல் (47). கிறிஸ்தவ மத போதகரான இவர், ஜெபம் செய்து பில்லி, சூனியம் அகற்றுவதாக கூறி, பெண்களிடம் நகைகளைப் பறித்துக் கொண்டு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், பட்டதாரி பெண்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, தவறாக நடந்து கொண்டதாகவும், பெண்களின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் 2016-ல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக நெல்லை தாழையூத்தை சேர்ந்த 24 வயதான பெண் அளித்த புகாரில், ஜெபம் செய்து பில்லி, சூனியம் அகற்றினால் குடும்பம் விருத்தி அடையும் என்று கூறி, தன்னை சேலத்துக்கு அழைத்துச் சென்று நிர்வாணப்படுத்தி படம் எடுத்துக்கொண்டு, 10 பவுன் நகையை பறித்துவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜோசுவா இம்மானுவேல் மீது புகார் அளித்தார். அதேபோல, பாப்பான்குளத்தை சேர்ந்த 26 வயதான பி.எட். கல்லூரி மாணவி, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தன்னை நிர்வாணப்படுத்தி, 6 பவுன் நகையை பறித்து மிரட்டியதாக புகார் அளித்தார். மேலும், ஜோசுவா இம்மானுவேல் உட்பட 4 பேர்தான் தனது மரணத்துக்கு காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, அந்த மாணவி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக தாழையூத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஜோசுவா இம்மானுவேல், அவரது ஓட்டுநரான விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த வினோத் குமார் (32) ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தாழையூத்தைச் சேர்ந்த பெண் அளித்த புகார் மீதான விசாரணை திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை நீதிபதி பன்னீர்செல்வம், குற்றம் சுமத்தப்பட்ட ஜோசுவா இம்மானுவேலுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.54 ஆயிரம் அபராதமும், வினோத் குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்