அவிநாசி: திருப்பூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் இயக்குநர் அலுவலகம் சார்பில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் தொடர் ஆய்வில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவிநாசி அருகே பெருமாநல்லூரை அடுத்துள்ள தட்டாங்குட்டையில், மருத்துவம் படிக்காமலேயே கிளினிக் வைத்து பெண் ஒருவர், கடந்த 8 மாதங்களாக மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜூக்கு புகார் சென்றது.
இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில், திருப்பூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மீரா தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தட்டாங்குட்டையில் செயல்பட்டு வந்த கிளினிக் மற்றும் மருந்துக்கடையில் ஆய்வு செய்தனர். அங்கு நிம்மி (எ) நிம்மி ஏஜோஸ் (43) என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததும், மருந்துச்சீட்டில் நிம்மி எம்பிபிஎஸ் எம்.டி., என குறிப்பிடப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து, நிம்மி ஏஜோஸிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அவர், வைத்திருந்த மருத்துவப் படிப்புக்கான பட்டச்சான்றிதழ்கள் அனைத்தும் பல்வேறு மாநிலங்களில் போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. தகவலின்பேரில் போலி மருத்துவர் நிம்மியை பெருமாநல்லூர் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, கிளினிக், மருந்தகத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.