விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு மூலப்பொருளில் ஒன்றான அட்டை பைப்புகள், பெட்டிகள், கூம்புகள் தயாரிக்கும் ஆலையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசியைச் சேர்ந்தவர் அர்ப்புதராஜன் (50). இவருக்குச் சொந்தமான பட்டாசு மூலப்பொருள்களுக்கான அட்டை பைப்புகள், பெட்டிகள், கூம்புகள், உருளைகள் உள்ளிட்டவைகளை இயந்திரங்கள் மூலம் தயாரிக்கும் ஆலை வச்சக்காரப்பட்டி அருகே உள்ள கோவிந்தநல்லூரில் இயங்கி வருகிறது. கடந்த சில நாள்களாக இந்த ஆலை செயல்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், இன்று பிற்பகல் இந்த ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக ஆலை முழுவதும் பரவியது. இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். வச்சக்காரப்பட்டி போலீஸார் மற்றும் விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் ஆலையிலிருந்த பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், அட்டை பெட்டிகள், பேன்ஸி ரக பட்டாசுகள் மற்றும் பூச்சட்டி போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் அட்டை உருளைகள் போன்றவை தீயில் எரிந்த முழுவதும் சேதமடைந்தன. மேலும், தீ விபத்து காரணமாக ஆலை முழுவதுமாக இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வேலையாட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.