அரியலூர்: செந்துறையை அடுத்த ஆ.சோழன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தீ.திவ்யா (19). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்த அவர், அரியலூர் அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த க.அன்பரசு(28) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருவரும் தங்களது வீட்டாரிடம் தெரிவித்த நிலையில், இருதரப்பை சேர்ந்தவர்களும் அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ள வில்லை. இதையடுத்து, கடந்த வாரம் திவ்யாவை வெளியில் அழைத்து சென்று அன்பரசு திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து, இருவரும், அன்பரசு வீட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில், அன்பரசுவின் பெற்றோர் வயலுக்கு சென்ற நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து க்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த இரும்புலிக்குறிச்சி போலீஸார் அங்கு வந்து, இருவரது உடலையும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.