விருதுநகர்: மல்லாங்கிணர் அருகே விவசாயி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மல்லாங்கிணர் அருகே உள்ள கீழத்துலுக்கன் குளத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (35). பட்டதாரியான இவர் விவசாயம் பார்த்து வந்தார். திருமணமாகி மனைவியைப் பிரிந்த இவர் விவாகரத்துப்பெற்று தனியாக வசித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த, கணவரை இழந்த முத்துலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதை முத்துலட்சுமியின் இளைய மகன் பிரபாகரன் (18) கண்டித்தார். அதோடு, தாயைவிட்டு விலகி அயன்ரெட்டிய பட்டியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.
தாயுடனான பழக்கத்தை ராஜேந்திரன் கைவிடாததால் ஆத்திரமடைந்த பிரபாகரன், தனது நண்பர் மல்லாங்கிணரைச் சேர்ந்த ராஜா (19) என்பவருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் கீழத்துலுக்கன்குளம் காட்டுப் பகுதியில் வந்த ராஜேந்திரனை கட்டை, இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த ராஜேந்திரன் மயங்கிக் கிடந்தார்.
இதைப் பார்த்த அப்பகுதியினர் மல்லாங்கிணர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனை க்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்தார். போலீஸார் வழக்குப் பதிந்து பிரபாகரனையும் அவரது நண்பர் ராஜாவையும் நேற்று கைது செய்தனர்.