தூத்துக்குடி: துணை மின் நிலையத்தில் உள்ள மின் மாற்றியில் மது போதையில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால் தூத்துக்குடி நகரில் சுமார் 1.30 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மட்டக்கடை அருகே உள்ள எஸ்.எஸ்.பிள்ளைத் தெருவைச் சேர்ந்த சதாசிவம் மகன் வினோத்குமார் (30). கூலித்தொழிலாளியான இவருக்கு மதுப் பழக்கம் இருந்து வந்தது. இவர் அடிக்கடி மது போதையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் வந்து படுத்துக்கொள்வார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் மதுபோதையில் இருந்த வினோத்குமார் வழக்கம் போல துணை மின்நிலைய வளாகத்துக்குள் சென்றுள்ளார். போதை மயக்கத்தில் அங்குள்ள மின்மாற்றி மீது ஏறினார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர், மின்மாற்றியில் உயிரிழந்த நிலையில் கிடந்த வினோத் குமாரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கீழே கொண்டுவந்தனர். மேலும், இது குறித்து வடபாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக தூத்துக்குடி நகர பகுதியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 1.30 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.