தூத்துக்குடியில் செல்போன் டவர் அமைப்பதாக ரூ.40 லட்சம் மோசடி: சென்னை நபர் கைது


தூத்துக்குடி: செல்போன் டவர் அமைத்து அதன் மூலம் வருமானம் பெறலாம் என, நில உரிமையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஆசை வார்த்தை கூறி ரூ.40.22 லட்சம் பணத்தை மோசடி செய்த நபரை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு, செல்போன் டவர் அமைக்க தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் செல்போன் டவர் அமைத்தால் நல்ல வருமானம் பெறலாம் என்றும், செல்போனில் குறுஞ்செய்தி வந்துள்ளது. முதியவர், அந்த நபரை தொடர்பு கொண்டு பேசிய போது, அவர், உங்கள் நிலத்தில் செல்போன் டவர் அமைத்து வருமானம் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார். மேலும், செல்போன் டவர் அமைப் பதற்கு ஆவணக் கட்டணம், பொருட்கள் செலவு போன்றவற்றுக்காக, முதியவரிடம் இருந்து ரூ.40,21,950 பெற்றுள்ளார். ஆனால், செல்போன் டவர் ஏதும் அமைக்கப்படவில்லை.

தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த முதியவர், இது குறித்து, தேசிய சைபர் குற்றப்பதிவு இணையதளத்தில் புகார் பதிவு செய்துள்ளார். தூத்துக் குடி சைபர் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி சகாய ஜோஸ் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த சுப்பாராவ் மகன் முரளி கிருஷ்ணன் (51) என்பவர், முதியவரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. முரளி கிருஷ்ணனை கடந்த 25-ம் தேதி சென்னையில் வைத்து போலீஸார் கைது செய்தனர். நேற்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

x