கொடைக்கானல் விடுதி உரிமையாளர் கொலை: மதுரை சிறுவன் உட்பட 4 பேர் கைது - காரணம் என்ன?


திண்டுக்கல்: கொடைக்கானலில் தனியார் தங்கும் விடுதி உரிமையாளரை மதுபோதையில் கொலை செய்து எரித்தது தொடர்பான வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் சிவகங்கையில் பயி்ற்சி மருத்துவரிடம் அத்துமீறிய வழக்கில் கைதானவர்.

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (59). இவர் பெரும்பள்ளம் பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வந்தார். சில தினங்களுக்கு முன்பு, அதே பகுதியில் கை, கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, பாதி எரிந்த நிலையில் சிவராஜின் உடலை போலீஸார் மீட்டனர்.

இக்கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார், மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த மணி கண்டனை (28) கைது செய்து விசாரித்தனர். அதில், சிவராஜின் தங்கும் விடுதிக்கு மணிகண்டன் உட்பட 4 பேர் வேலைக்குச் சென்றுள்ளனர். இவர்களுக்கும், சிவராஜுக்கும் இடையே ஊதியம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதில், மதுபோதையில் இருந்த 4 பேரும் சிவராஜை அடித்துக் கொலை செய்துவிட்டு, உடலை எரிக்க முயன்றுள்ளனர். உடல் எரியாததால் கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி, அப்பகுதியில் இருந்த புதரில் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மணிகண்டனை போலீஸார் கைது செய்தனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த சிவகங்கை யைச் சேர்ந்த சந்தோஷ் (20), திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அருண் (23) மற்றும் மதுரை கூடல்புதூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கொடைக்கானல் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதில், மணிகண்டன் மீது ஏற்கெனவே வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ், ஏற்கெனவே சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவரிடம் அத்துமீறி நடந்து கொண்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

x