மதுரை: உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில், போலீஸ்காரர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை, தனிப்படை போலீஸார் தேடுகின்றனர்.
மதுரை மாவட்டம், சிந்துப்பட்டி அருகிலுள்ள கள்ளபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (45). உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றினார். விடுமுறையில் இருந்த முத்துக்குமார், உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டி பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று மாலை சென்றுள்ளார். அங்கு அவருக்கும், ஏற்கெனவே அங்கு மது அருந்திக்கொண்டிருந்த 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து கல்லால் தாக்கி முத்துக்குமாரை கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர். முத்துக் குமாருடன் வந்த அவரது ஊரைச் சேர்ந்த ராஜாராம் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த உசிலம்பட்டி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று முத்துக்குமாரின் உடலை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து உசிலம்பட்டி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், மது போதையில் நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், டிஎஸ்பி சந்திரசேகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். கொலையான முத்துக்குமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.