சீருடைக்கு அளவெடுத்த டெய்லர்கள் மாணவிக்கு பாலியல் சீண்டல்: மதுரை தனியார் பள்ளியில் கொடுமை


மதுரை: தனியார் பள்ளி மாணவிக்கு சீருடை தைக்க, அளவெடுத்த டெய்லர்கள் பாலியல் சீண்டல் செய்ததாக ஆசிரியை உட்பட 3 பேர் போக்சோ-வில் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் கண்டித்து பள்ளியை முற்றுகையிட்ட 20-க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

மதுரை எம்கே.புரம் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடம் செயல்படுகிறது. இப்பள்ளி மாணவிகளுக்கான சீருடை தைக்க ஆண் டெய்லர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு சீருடை தைக்க, அளவு எடுத்த ஆண் டெய்லர் அளவெடுத்தபோது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், இதற்கு பெண் டெய்லர் ஒருவர் உடந்தையாக இருப்பதும் சர்ச்சை எழுந்தது.

இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியையிடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் புகார் அளித்த நிலையிலும், நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரை நகர் மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியை மற்றும் ஒரு ஆண், பெண் டெய்லர்கள் மீது ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையில் பள்ளி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இனிமேல் ஆண் டெய்லர்கள் மாணவிகளுக் கான சீருடைக்கு அளவீடு எடுக்கக்கூடாது என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் , மாதர் சங்கத்தினர் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து 20-க்கும் மேற்பட்டாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

x