கடலூர்: ஸ்ரீமுஷ்ணத்தில் இடத்தை பத்திரம் பதிவு செய்து விட்டு, ரூ.22.25 லட்சம் தராமல் ஏமாற்றிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கொழை சாவடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (35). ராசிக் கல் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் விழுப்புரம் ஜனகராஜ் நகரைச் சேர்ந்த குமார் (45) என்பவரும் இடையே ராசிக்கல் விற்பனையின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குமாருக்கு, சண்முகவேல் ரூ.23 லட்சம் தர வேண்டி இருந்தது.
இதனால் தனக்கு சொந்தமான 23 சென்ட் இடத்தை குமாருக்கு அவர் பத்திரவு பதிவு செய்து கொடுத்தார். ஆனால், பணத்தை திரும்ப கொடுக்கும் போது, இடத்தையும் திரும்ப கொடுக்க வேண்டும் என சண்முகவேல் கூறியுள்ளார். இதற்கு குமார் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முழு பணத்தையும் தருவதாகவும், இடத்தை திரும்ப வழங்க வேண்டும் என குமாரிடம் சண்முகவேல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஸ்ரீமுஷ்ணத்தில் இரு தரப்பினரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சண்முகவேல் தான் கொண்டு வந்த ரூ.22 லட்சத்து 25 ஆயிரத்தை குமாரிடம் எண்ணி காண்பித்துள்ளார். பத்திர பதிவு முடிந்த பிறகு பணத்தை தருவதாக சண்முகவேல் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய குமார், ஸ்ரீமுஷ்ணம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் சண்முகவேல் கூறியபடி அசோக்குமார் என்பவருக்கு இடத்தை பதிவு செய்து கொடுத்தார். அதன் பிறகு ரூ. 22 லட்சத்து 25 ஆயிரத்தை குமாரிடம் கொடுக்காமல் சண்முக வேல் மற்றும் அவருடன் வந்தவர்கள் பணத்துடன் ஓடி விட்டனர்.
அதிர்ச்சி அடைந்த குமார் இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி, ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த அசோக்குமார் (29), ஆனந்தன் (38), பிரபாகரன் (28) சேத்தியாதோப்பு வெங்கடேசன் (39) ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக சண்முகவேல் உள்ளிட்ட சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.