சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைப்பு; எட்டயபுரத்தில் இளைஞர்கள் இருவர் கைது


தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தாயுடன் வசித்து வந்தார். அச்சிறுமியுடன் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (21) என்பவர் பழகியுள்ளார். இதை சிறுமியின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக பரமக்குடி காவல் நிலையத்தில் கடந்த 2024-ம் ஆண்டு புகார் அளிக்கப் பட்டுள்ளது.

ஆனால், சந்தோஷினால் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டதால், அந்த சிறுமி எட்டயபுரம் அருகே உள்ள கீழ நம்பி புரத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில், கீழநம்பிபுரம் வீட்டில் கடந்த 23-ம் தேதி மதியம் திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது, தீக்காயங்களுடன் சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எட்டயபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி போலீஸாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில், சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகியோர் வந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர் எனக் கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சந்தோஷ், முத்தையா(22) ஆகியோரை எட்டயபுரம் போலீஸார் கைது செய்தனர்.

x