டிவி சத்தத்தை குறைக்க சொன்னதால் தகராறு: கோவையில் லாரி ஓட்டுநர் கொலை


கோவை: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (30). இவர், கோவை சுந்தராபுரம் அருகே தங்கியிருந்து, கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருடன், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சியாஸ் என்பவர் தங்கி, அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இருவரும் ஒன்றாக மது அருந்தினர். பின்னர், ஆறுமுகம் தூங்கச் சென்று விட்டார். சியாஸ் வீட்டில் டி.வியில் அதிக சத்தம் வைத்து படம் பார்த்துக் கொண்டிருந்தார்.

சத்தத்தை குறைக்கும்படி ஆறுமுகம் கூறியுள்ளார். அவர் குறைக்காததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சியாஸ் மது பாட்டிலை எடுத்து ஆறுமுகத்தின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் தாக்கிவிட்டு தப்பினார். ஆறுமுகத்தின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சுந்தராபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

x