திருப்பத்தூர்: மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்திய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் (26). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (25). நண்பர்களான இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள், அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மதுபானம் அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ராமன் தனது நண்பர் ராகுலை விட்டுவிட்டு வேறு ஒருவருடன், அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைக்கு மதுபானம் அருந்த சென்றார்.
இதையறிந்த, ராகுல் தனது நண்பர் ராமனிடம் சென்று, என்னை விட்டுவிட்டு எப்படி வேறு ஒருவருடன் சேர்ந்து மது அருந்த செல்லலாம் எனக்கூறி தகராறு செய்துள்ளார். அப்போது, அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ராகுல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமனின் வயிற்றில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த ராமனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ராமன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ராகுலை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.