திருப்பத்தூரில் தவணை கட்ட தவறியவர் மீது தாக்குதல்: பைனான்ஸ் ஊழியர்கள் 2 பேர் கைது


திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் பெருமாப்பட்டு அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யநாராயண (46). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுகந்தி. சத்யநாராயணன் திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் பெற்றுள்ளார்.

இதற்கான தவணை தொகையை சத்யநாராயணன் கட்டத் தவறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி தனியார் பைனான்ஸில் பணிபுரியும் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திருநல்வாடி கிராமத்தைச் சேர்ந்த ஜீவா கிருஷ்ணன் (37), நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தனுசக்தி (32) ஆகியோர் சத்ய நாராயணனிடம் சென்று தவணை தொகையை கேட்டுள்ளனர்.

அப்போது, சத்ய நாராயணனுக்கும், பைனான்ஸ் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பைனான்ஸ் ஊழியர்கள் சத்ய நாராயணனை தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த சத்ய நாராயணனின் மனைவி சுகந்தியையும் தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த சத்ய நாராயணன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் சத்ய நாராயணன் புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜீவா கிருஷ்ணன், தனுசக்தி ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.

x