தங்கை பெயரில் சொத்து எழுதிவைத்த ஆத்திரம்: ஆற்காடு அருகே பாட்டியை கொன்ற பேரன் தலைமறைவு


ஆற்காடு அடுத்த காவனூரில் சொத்து தகராறு காரணமாக பாட்டியை கருங்கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு, தலைமறைவாக உள்ள பேரனை திமிரி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் காசிஅம்மாள் (70). இவரது மகன் வழி பேரன் தேவா (25), பேத்தி நந்தினி (23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேவா மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால், ஆத்திரம் அடைந்த காசி அம்மாள் பூர்விக சொத்தான பல லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டை, கல்லூரி பயின்று வரும் தனது பேத்தி நந்தினி பெயருக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக தேவா பணப் பிரச்சினையால் தவித்து வந்துள்ளார். வீட்டின் மூலமாக பணம் பெற நினைத்த தேவாவுக்கு, வீட்டினை தனது தங்கை பெயருக்கு மாற்றி எழுதியுள்ளது தெரிந்து அதிருப்தி அடைந்தார். இந்நிலையில், தேவா தனது பாட்டி காசி அம்மாள் வீட்டுக்கு நேற்று வந்தார். அப்போது, சொத்தை தனது தங்கை பெயருக்கு மாற்றி எழுதியதை குறித்து பாட்டியிடம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த தேவா கீழே இருந்த கருங்கல்லை எடுத்து பாட்டியின் தலையில் அடித்துக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில், படுகாயம் அடைந்த காசிஅம்மாள் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தகவலறிந்த திமிரி காவல்துறையினர் உயிரிழந்த காசி அம்மாள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து திமிரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள தேவாவை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சொத்து பிரச்சினை யால் பாட்டியை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

x