ஈரோடு: கோபி நகராட்சி அலுவலகத்தில், நகரமைப்பு பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சுப்பிரமணியன் (48). கோபியைச் சேர்ந்த பொறியாளர் வருண் என்பவர், புதிதாக கட்டிட அனுமதி தொடர்பாக சுப்பிரமணியனைச் சந்தித்து விசாரித்துள்ளார். அப்போது புதிய கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதற்கு ரூ.40 ஆயிரம் வேண்டும் என சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இருவரும் கலந்து பேசியபின், ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வருண் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் அறிவுறுத்தல்படி, நேற்று காலை கோபி நகராட்சி அலுவலகம் சென்ற வருண், ரசாயனம் தடவிய பணத்தை சுப்பிரமணியனிடம் கொடுத்தார். அப்போது, ஏடிஎஸ்பி ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார், சுப்பிரமணியனை கைது செய்தனர்.