பொள்ளாச்சி அரசு பேருந்தில் பயணியிடம் 9 பவுன் நகை திருட்டு: 3 பெண்கள் கைது


கோவை: பொள்ளாச்சியில் அரசு பேருந்தில் கோயிலுக்குச் சென்ற பெண் பயணியிடம் நகையை திருடிய மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகா (69) என்பவர் கடந்த 8-ம் தேதி, ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு செல்வதற்காக பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த 9 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடினர்.

இது குறித்து மல்லிகா அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த அமுதா (39), தேவயானி (23), மீனா (37) ஆகியோர் மல்லிகாவிடம் இருந்து நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். மூவரும் சென்னை அசோக் நகர், வட பழனி, ஜோலார்பேட்டை, உடுமலை, திருப்பூர் வடக்கு மற்றும் நாமக்கல் காவல் நிலைய குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

x