ராமநாதபுரம்: கோயில் உண்டியல்களை உடைத்து திருடிய இளைஞருக்கு பரமக்குடி குற்றவியல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் நாகநாதர் கோயில் உள்ளது. 2022ம் ஆண்டு இக்கோயில் உண்டியலை உடைத்து திருடியதாக சிவகங்கை மாவட்டம், கோமாளிபட்டியைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பவரை நயினார்கோவில் போலீஸார் கைது செய்தனர்.
இவர் நயினார்கோவில் அருகே நாரமங்கலத்தில் உள்ள கோயிலிலும் உண்டியலை உடைத்து திருடியுள்ளார். இந்த வழக்குகளின் விசாரணை பரமக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நேற்று நடந்த விசாரணையில் நீதித்துறை நடுவர் ஆர்.பாண்டி மகாராஜா, சுரேஷுக்கு தலா 5 ஆண்டுகள் வீதம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.