சிவகாசியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் 38 பேர் கைது


விருதுநகர்: சிவகாசியில் கடந்த 3 மாதங்களில் 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் 38 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிவகாசி அருகே திருத்தங்கல் கண்ணகி காலனியில் ஜனவரி 11ம் தேதி காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் வீர மாணிக்கம் கொலை செய்யப் பட்டார். சிவகாசி முருகன் காலனியில் பிப்ரவரி 13ம் தேதி குடும்ப தகராறில் ராஜ லட்சுமியை அவரது கணவர் திருமலை குமாரால் கொலை செய்யப்பட்டார். விஸ்வநத்தத்தில் பிப்ரவரி 25ம் தேதி குடும்ப தகராறில் வீரமணி (47) என்ற பெண் அவரது மருமகனால் கொலை செய்யப்பட்டார்.

சிவகாசி சிவகாமிபுரம் காலனியில் கடந்த 8ம் தேதி முன்விரோதத்தில் பட்டாசு தொழிலாளி கருப்பசாமி (30) 4 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். சிவகாசி முனீஸ் நகரில் கடந்த 16ம் தேதி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த சுரேஷ் (27) என்ற இளைஞர் பழிக்குப் பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுரேஷுடன் வாழ்ந்து வந்த பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகாசியில் கடந்த 3 மாதங்களில் 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சிவகாசி காவல் உட்கோட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், கொலை, கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்தவர்கள் என 38 சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து டி.எஸ்.பி பாஸ்கர் கூறுகையில், சிவகாசியில் சமீபத்தில் நடந்த கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், சம்பவம் நடந்த அன்றே கைது செய்யப்பட்டு விட்டனர். குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் 38 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

x