நாகர்கோவில்: லஞ்சம் வாங்கிய வழக்கில் இடலாக்குடியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சார்பதிவாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரமும் அபராதமும் விதித்து நாகர்கோவில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
நாகர்கோவில் அருகே இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2012ம் ஆண்டு சார் பதிவாளராக பணி புரிந்தவர் சுயம்புலிங்கம். இவர், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி பணியில் இருந்தபோது, நாகர்கோவிலை சேர்ந்த ரவி அசேகன் என்பவர் சொத்து பத்திரத்தின் சான்றொப்பம் இட்ட நகல் கோரி விண்ணப்பித்திருந்தார்.
இதற்கு சுயம்புலிங்கம் ரூ.2,000 கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவி அசோகன் இது குறித்து நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் ஆலோசனைப்படி ரூ.2,000-ஐ சுயம்பு லிங்கத்திடம் ரவி அசோகன் கொடுத்த போது அப்போதைய லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சுந்தர் ராஜ் மற்றும் போலீஸார் சுயம்பு லிங்கத்தை கைது செய்தனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளராக இருந்தவரும், தற்போதைய டிஎஸ்பியுமான சால்வன்துரை வழக்குப் பதிவு செய்தார்.
நாகர்கோவில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்து வந்தது. வழக்கை நேற்று விசாரித்த தலைமை குற்றவியல் நடுவர் சாமுவேல் பெஞ்சமின் குற்றம் சாட்டப்பட்ட சுயம்புலிங்கத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜரானார்.