திருச்செந்தூரில் கூடா நட்பால் பெண் கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை


தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி தமிழ்செல்வி என்ற சுதா (25). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு திருச்செந்தூர் காந்திபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கன்னிமுத்து (29) என்பவருடன் தமிழ் செல்வி என்ற சுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அன்று கன்னிமுத்துவுடன் தமிழ் செல்வி மாயமானதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கன்னிமுத்து மனைவி திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தமிழ்செல்வி 2014ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி அன்று தனது தாய் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அதன் பிறகு கன்னி முத்துவுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கன்னிமுத்து, 2014ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அன்று தமிழ் செல்வியின் வீட்டுக்குள் நுழைந்து, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து கன்னிமுத்துவை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பிரீத்தா, குற்றம் சாட்டப்பட்ட கன்னிமுத்துக்கு கொலை குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையும், இதனை ஏககாலத்தில் அனுபவிக்கவும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

x