மதுரை: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மதுரை கடச்சனேந்தலை சேர்ந்தவர் சேகர் (45). இவர் 2018ல் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தார். கடனை திரும்ப செலுத்த, அந்த நபர் வீட்டுக்கு சேகர் சென்றபோது அந்த நபரின் 17 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவருக்கு மயக்க மருந்து கலந்த கேக் கொடுத்து, அச்சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் அச்சிறுமி கர்ப்பமானார்.
இது தொடர்பாக அப்பன் திருப்பதி போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சேகரை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதனிடையே பாதிக்கப் பட்ட சிறுமி உடல் நலக்குறைவால் இறந்தார்.
விசாரணை முடிந்த நிலையில் சேகருக்கு ஆயுள் தண்டனை, ரூ.25,000 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்கவும், சிறுமி உயிருடன் இல்லாததால் இழப்பீட்டு தொகையை சிறுமியின் பாதுகாவலரிடம் வழங்கவும் நீதிபதி எஸ்.முத்துகுமாரவேல் உத்தரவிட்டார்.