கருவின் பாலினத்தை கண்டறியும் சோதனையில் ஈடுபட்ட 3 பேர் கைது; கடலூரின் வேப்பூரில் பரபரப்பு


சேலம்: கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறியும் சோதனையை சில குழுக்கள் செய்து வருவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் சேலம் மாவட்ட மருத்துவ அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், நேற்று விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது காரில் ஸ்கேனிங் செய்யும் இயந்திரத்தோடு ஒரு குழு கடலூர் மாவட்டம் வேப்பூர் பேருந்து நிலையத்தை ஒட்டிய பகுதியில் இருந்தபடியே, பொதுமக்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு இச்சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மருத்துவக்குழுவினர் வேப்பூர் பேருந்து நிலையம் விரைந்தனர்.

அங்கு காரில் வைத்து சிசுவின் பாலினம் கண்டறியும் சோதனையில் ஈடுபட்ட திட்டக்குடியை அடுத்த மா.புடையூரைச் சேர்ந்த தென்னரசு (32), பெரியார் நகரைச் சேர்ந்த தீனதயாள் மனைவி அஜிரபீ (32) மற்றும் ஆத்தூரை அடுத்த குமாரபாளையத்தைச் சேர்ந்த ஜெயவேல் மனைவி எல்லம்மாள் (32) ஆகியோரை பிடித்தனர்.

அவர்களிடம் இருந்த ஸ்கேனிங் இயந்திரத்தை பறித்து, வேப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலன் அளித்த புகாரின் பேரில், வேப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

x