பெரம்பலூர்: பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் பாலையூர் கிராமம் கருவியாப்பாட்டி தெருவைச் சேர்ந்தவர் மு.மணிகண்டன் (29). சிலை செய்யும் சிற்பியான இவர், 2019ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூர் கிராமத்தில் தங்கி கோயில் சிலை செய்து வந்தார். இந்நிலையில் 2019ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அன்று பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த பள்ளி மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், மருவத்தூர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மாணவியை ஆந்திரா மாநிலம் சென்று மீட்டனர். மாணவியை கடத்திச் சென்ற மணிகண்டனை ஆந்திராவில் இருந்து கைது செய்து பெரம்பலூருக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். பின்னர், மணிகண்டன் ஜாமீனில் வெளியே வந்தார்.
பெரம்பலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று மகளிர் நீதிமன்ற நீதிபதி இந்திராணி நேற்று தீர்ப்பளித்தார். அதில், மாணவியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞர் மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டனை போலீஸார், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.