தஞ்சை: தஞ்சாவூரில் செய்தி மக்கள் தொடர்பு துறையில், ஏபிஆர்ஓ வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.63 கோடி மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் க.மோகன் தாஸ் (48). அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கா.சிதம்பரம் (72). சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில், தனக்கு எம்.பி., எம்எல்ஏ-க்களை நன்கு தெரியும் என்றும், அமைச்சர் ஒருவரிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் சிதம்பரத்திடம் மோகன் தாஸ் கூறியுள்ளார்.
மேலும், சிதம்பரத்தின் மகனுக்கு, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதை உண்மை என சிதம்பரம் நம்பி 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை பல தவணைகளாக ரூ.1.63 கோடி கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட மோகன்தாஸ், 2018ம் ஆண்டு வரை வேலை வாங்கித் தராததால், அவரிடம் மோகன்தாஸ் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.
ஆனால், அவர் வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பி தராமல் இருந்ததால், கடந்த பிப்.21ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மோகன் தாஸ் மீது சிதம்பர் புகார் அளித்தார். இதுகறித்து கடந்த மார்ச் 14ம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதுதொடர்பாக கடந்த 20ம் தேதி போலீஸார், அவரது கடைக்கு சென்று சம்மன் வழங்க சென்றனர். ஆனால் பணம் கேட்டு போலீஸார் தன்னை தாக்கியதாகக் கூறி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மோகன் தாஸ் சேர்ந்தார். இந்நிலையில், நேற்று அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.