பூந்தமல்லி: மாங்காடு அருகே திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணுடன் இருந்த காணொளியை உறவினர்களுக்கு அனுப்பிய போக்குவரத்து காவலர் கைது செய்யப்பட்டார்.
மதுபோதையில் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்த சம்பவம் தொடர்பாக கைதாகி, நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வந்த சில நாட்களில் மீண்டும் கைதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, கோயம்பேடு போக்குவரத்து காவல் பிரிவில், காவலராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த். இவர், மாங்காடு அருகே உள்ள மௌலிவாக்கம், ராஜராஜன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், குழந்தை இல்லாததால் முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இதையடுத்து, இரண்டாவதாக ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், ஆனந்தின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், மனவேதனையில் இருந்த ஆனந்த், மது அருந்திவிட்டு, அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் வீண் தகராறு செய்வது, வீடுகள், வாகனங்களை அடித்து உடைப்பது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த மாங்காடு போலீஸார், கடந்த மாதம் ஆனந்தை கைது செய்து சிறையிலடைத்தனர். இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த ஆனந்த் மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்து விட்டு வந்தார்.
இச்சூழலில், தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணிடம், ‘தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு’ ஆனந்த் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளார்.ஆனால், அந்த பெண் திருமணம் செய்து கொள்ள தொடர்ந்து மறுத்து வந்ததால், ஆத்திரமடைந்த ஆனந்த், சம்பந்தப்பட்ட பெண்ணும் தானும் ஒன்றாக இருந்த காணொளி மற்றும் புகைப்படங்களை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பியதாக தெரிகிறது.
இதுகுறித்து, பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், போரூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, முதல் கட்ட விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் அடிப்படையில், நேற்று இரவு ஆனந்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.